ஆசிய பசுபிக் வலய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் அணி நாடு திரும்பியது

by Staff Writer 20-03-2019 | 1:38 PM
Colombo (News 1st) ஆசிய பசுபிக் வலய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இலங்கை அணி நேற்றிரவு நாடு திரும்பியுள்ளது. ஆசிய பசுபிக் வலய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் இலங்கை வீர, வீராங்கனைகள் மொத்தமாக 29 பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். அதில் 18 தங்கம், 8 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என்பன உள்ளடங்கின. ரன்சிலு ஜயதிலக, பிரதீப் குமார, ஹிரான் ஜயஷாந்த ஆகியோர் 3 தங்கப்பதக்கங்களை வென்று ஆடவர் பகிரங்க சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர். தில்ருக்ஸி குமாரி 48 கிலோகிராம் எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தையும் ரன்துனு கீதிகா 63 கிலோகிராம் எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும் வெற்றிகொண்டு மகளிர், பகிரங்கத்தில் இரண்டாமிடத்தை அடைந்துள்ளனர்.
இது உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதிபெறுவதற்கான போட்டித் தொடராகவே இடம்பெற்றது. நாம் அனைவரும் பதக்கங்களை வென்றோம். அதனூடாக 29 நாடுகளை விஞ்சி ஆடவர் பகிரங்க சாம்பியன் பட்டத்தை எம்மால் வெற்றிகொள்ள முடிந்தது. மகளிர் அணி இரண்டாமிடத்தைப் பிடித்தது. ஆசிய பசுபிக் வலயத்தில் இலங்கை முதல்தடவையாக இந்தப் போட்டிகளில் சாம்பியனாகியுள்ளது
என ரன்சிலு ஜெயதிலக்க தெரிவித்துள்ளார். அதேநேரம்,
எம்முடைய வெற்றி அதிசிறப்பானது. 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, நவுரு தீவுகள், மொங்கோலியா போன்ற பிரசித்திபெற்ற நாடுகள் இதில் போட்டியிட்டன
என பயிற்றுநர் குறிப்பிட்டுள்ளார்.