அடிக்கடி செயலிழக்கும் மின் பிறப்பாக்கிகளால் நாட்டிற்கு 50 பில்லியன் ரூபா நட்டம்

by Staff Writer 20-03-2019 | 7:20 PM
Colombo (News 1st) கடந்த திங்கட்கிழமை (18) செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கியின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை இன்று அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்தது. மின் பிறப்பாக்கி செயலிழந்தமையால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவாட் மின்சாரத்தை வழங்க முடியாமல் போனமையினால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டி ஏற்பட்டது. 1.45 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 2014 ஆம் ஆண்டு நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இதுவரை பல தடவைகள் இதன் பிறப்பாக்கிகள் செயலிழந்தமையால் பாவனையாளர்கள் அடிக்கடி சிரமங்களை எதிர்கொண்டனர். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக பெற்றுக்கொண்ட கடனை, இலங்கை மின்சார சபை செலுத்துவதில்லை என்பதுடன், அது பொதுமக்களிடம் இருந்து அறவிடப்படும் வரி மூலம் செலுத்தப்படுகின்ற போதிலும், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. மின் பாவனையாளர்களுக்கு உரிய முறையில் சேவையை வழங்குவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொள்வதாகக் கூறப்பட்டாலும், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அமைச்சரவை அனுமதித்த மாற்றுக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் இதுவரையில் முடியவில்லை. அத்துடன், மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நட்டம் 50 பில்லியன் ரூபாவை விட அதிகமாகும்.