வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிழக்கில் ஹர்த்தால்: வடக்கிலும் ஆதரவு

by Staff Writer 19-03-2019 | 7:34 PM
Colombo (News 1st) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தால் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் போர் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பில் இன்று எழுச்சிப் பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டது. கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து காந்தி பூங்கா வரை இந்த பேரணி இடம்பெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்புகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். வாகரை, வாழைச்சேனை, கிரான், சித்தாண்டி, செங்கலடி, தன்னாமுனை போன்ற பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுசந்தைகள் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்தன. அத்துடன், அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களின் வருகை குறைவாக இருந்ததுடன், பெரும்பாலான பாடசாலைகள் முற்பகல் முதல் மூடப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் கூறினர். மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக செய்தியாளர் மேலும் கூறினார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தமிழ் பிரதேசங்கள் மற்றும் திருக்கோவில் ஆகிய பகுதிகளில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றின் மீது இன்று காலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். பெரிய நீலாவணை பிரதான வீதியில் இனந்தெரியாத சிலரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, திருகோணமலையில் உள்ள சில தமிழ் பாடசாலைகளுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கின் சில பாகங்களிலும் கடையடைப்புப் போராட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டன. யாழ். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள், பொது சந்தைகள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்ததுடன், பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு குறைவாக இருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொதுச்சந்தை இன்றைய தினம் இயங்கவில்லை என்பதுடன், தேநீர் சாலைகள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். அத்துடன், திணைக்களங்கள் மற்றும் வங்கிகளின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே இடம்பெற்றுள்ளன. யாழ் - திருநெல்வேலி பொதுச்சந்தை மூட்பட்டிருந்ததுடன், நகரிலுள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததாகவும் செய்தியாளர் கூறினார். முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததுடன், பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு குறைவாகக் காணப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலும் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் தவிர அனைத்து வர்த்தக நிலையங்களும் பொதுச்சந்தைகளும் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்தன. அத்துடன், வழமைக்கு மாறாக கிளிநொச்சி மாவட்டத்தின் நகர் பகுதிகளில் மக்களின் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.