by Staff Writer 19-03-2019 | 3:42 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை - நாரஹேன்பிட்ட வீதியை அண்மித்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு குறைவான மாணவர்களே உள்வாங்கப்படுவதாகத் தெரிவித்து, கொழும்பு - வார்ட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்றலில் பல்கலைக்கழக மாணவர்கள் கூடினர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம்
ஆகியன முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
வார்ட் பிளேஸ் வீதியை மறித்து எதிர்ப்பை வௌியிட்டதன் பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை, மருதானை உள்ளிட்ட கொழும்பு நகரின் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேவேளை, மருத்துவ பீடத்தின் மாணவ செயற்பாட்டுக்குழு மற்றும் பெற்றோர் சிலர் சுகாதார அமைச்சிற்கு முன்னால் மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஊடாக, சைட்டம் மாணவர்களுக்கு மருத்துவப் பட்டம் வழங்குவதாக எடுத்த தீர்மானத்தை மீறி, சுகாதார அமைச்சு தலையீடு செய்து, வேறு வகையில் குறித்த மாணவர்களுக்கு மருத்துவப் பட்டத்தை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றஞ்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.