கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

by Staff Writer 19-03-2019 | 1:24 PM
Colombo (News 1st) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் போர்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் கிழக்கு மாகாணத்தில் இன்று (19ஆம் திகதி) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தால் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பன இந்த ஹர்த்தாலுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்த ஹர்த்தாலை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று எழுச்சிப் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, காந்தி பூங்கா வளாகத்திலிருந்து எழுச்சிப் பேரணி ஆரம்பிக்கப்பட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கிழக்கின், மட்டக்களப்பு , அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களிலுமுள்ள அரச நிறுவனங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, கிழக்கு மக்களின் ஹர்த்தாலுக்கு வடக்கின் சில பகுதிகளில் இன்று ஆதரவளிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் போக்குவரத்து பஸ்களும் சேவையில் ஈடுபடவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இயங்கவில்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் பகுதிகளில் மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்