அ.இ.அ.தி.மு.க தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

ஈழத் தமிழரின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: அ.இ.அ.தி.மு.க தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

by Bella Dalima 19-03-2019 | 5:22 PM
Colombo (News 1st) இந்திய மக்களவை தேர்தலுக்கான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வௌியிடப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிட்டனர். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 38 அம்ச தேர்தல் விஞ்ஞாபனத்தில் கச்சதீவை மீட்டல், இலங்கையின் போர்க்குற்ற விசாரணை உள்ளிட்ட விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுப்பதாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் வௌியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழத் தமிழருக்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக உதவியவர்கள் மீதும் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, ஈழத்தில் நடைபெற்ற துயரங்களின் பின்னணியில் மறைந்திருக்கும் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.