முன்னாள் கடற்படைத் தளபதி இன்றும் CID இல் ஆஜர்

இளைஞர்கள் கடத்தல்: உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 19-03-2019 | 12:12 PM
Colombo (News 1st) 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் லெப்டினன் கமாண்டர்கள் இருவர் உள்ளிட்ட 6 உத்தியோகத்தர்களினது விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் சந்தேகநபர்களை இன்று (19ஆம் திகதி) ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்ட தொலைபேசி கலந்துரையாடல் அறிக்கையின் அடிப்படையில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்துள்ளனர். அதற்கமைய, கடற்படையின் முன்னாள் லெப்டினன் கமாண்டர்களான நிலந்த சம்பத் முனசிங்க மற்றும் பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மூன்றாவது நாளாக இன்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இன்று முற்பகல் 9.30 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுவதை தடுக்கும் வகையில் கடந்த 7ஆம் திகதி உயர் நீதிமன்றம் தடைஉத்தரவை பிறப்பித்தது. முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி இந்தச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.