அருவக்காட்டில் குப்பை கொட்டுவதற்கு எதிராக தலைநகரில் ஆர்ப்பாட்டம்: ஜனாதிபதி கரிசனை செலுத்துவார் என உறுதி

by Staff Writer 19-03-2019 | 7:59 PM
Colombo (News 1st) புத்தளம் - அருவக்காடு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக தலைநகரில் பெருந்திரளானவர்கள் கூடி எதிர்ப்பு வௌியிட்டனர். அருவக்காடு பகுதியில் குப்பை கொட்டும் திட்டத்தை கைவிடுமாறு கோரி மக்கள் அப்பகுதியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும், மக்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிமடுக்கத் தவறியதால் இன்று அவர்கள் தலைநகரில் கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கொழும்பு காலி முகத்திடலில் இன்று முற்பகல் கூடிய மக்கள் கொழும்பின் குப்பைகளை தாம் பொறுப்பேற்கத் தயாரில்லை என தெரிவித்தனர். இந்த கழிவகற்றும் திட்டத்தினால் தாம் மாத்திரம் அல்லாது எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் சுட்டிக்காட்டினர். பின்னர் காலி வீதியோரத்தில் கூடிய மக்கள் சுலோகங்களை ஏந்தியவாறு கோஷமெழுப்பினர். அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் வரை பேரணியை முன்னெடுக்க அவர்கள் முயன்ற போதிலும், பொலிஸாரினால் பேரணி வழிமறிக்கப்பட்டது. எவ்வாறாயினும், போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட குழுவினருக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற குழுவினர் திரும்பி வரும் வரை மக்கள் தொடர்ந்தும் கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில் லோட்டஸ் சுற்றுவட்டத்தை தற்காலிகமாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். எதிர்வரும் 22 ஆம் திகதி புத்தளத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்துவார் என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் உறுதியளித்ததாக போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவித்தலை அடுத்து காலி வீதி வழியாக அலரி மாளிகை நோக்கி பேரணி முன்னெடுக்கப்படவிருந்தாலும் அதனையும் பொலிஸார் வழிமறித்தனர். பொலிஸாரின் தலையீட்டில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் அலரி மாளிக்கைக்குள் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது அங்கு பிரதமர் இல்லாத காரணத்தால், இவ்விடயம் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்து ஓரிரு நாட்களில் தீர்வு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.