கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

by Fazlullah Mubarak 18-03-2019 | 8:32 AM

இந்தியாவின் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்.

கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் காலமாகியதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது 63ஆவது வயதில் நேற்று இரவு காலமானார். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் புற்றுநோயால் பாதிக்கப்படிருந்த முதலமைச்சர் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை பெற்ற பின் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் பானாஜியில் மாண்டோவி நதியின் குறுக்கே அமையும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டிருந்தார். பின்னர் கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்த வந்த அவர், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மனோகர் பாரிக்கர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அவர் இறக்கும் போதும் கோவா முதல்வராகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவை இந்திய குடியரசுத் தலைவர் தனது டுவிட்டர் தளத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இந்திய மத்திய அரசு தேசிய துக்க தினமாக இன்றைய தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறையையும் அறிவித்துள்ளது.