இலங்கையின் கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் தொடர்பில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

இலங்கையின் கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் தொடர்பில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2019 | 9:52 pm

Colombo (News 1st) இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது,

குறிப்பாக முறையற்ற விதத்தில் 1,87,900 ரூபா ஹொங்கொக்கிலுள்ள வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. 5.5 மில்லியன் டொலரை வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நிதிப்பிரிவு பிரதானியான பியல் திசாநாயக்க என்பவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்புபட்ட அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் ஹன்சாட்டில் பதிவிடுமாறு, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆட்டநிர்ணய விடயத்தில் குற்றவாளியாகக் காணப்பட்ட ரவீன் விக்ரமரத்ன என்பவர் இன்று கிரிக்கெட் உப தலைவர்களில் ஒருவராக இருக்கின்றார். ஆட்டநிர்ணயம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாலித்த குமாரசிங்கவும் குழுவினால் குற்றவாளியாகக் காணப்பட்டவர். அந்த அறிக்கையும் முழுமையாக தன்னிடம் உள்ளதாகக் கூறிய அமைச்சர், அதனையும் ஹன்சாட்டில் பதிவிடுமாறும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தான் பௌத்த தர்மத்தை பின்பற்றுபவன் எனவும் 25 மில்லியன் ரூபா விகாரை ஒன்று பல்கலைக்கழகம் அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக தேரர் ஒருவருக்கு அதற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனையும் ஹன்சாட்டில் பதிவிடுமாறும் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்த திலங்க சுமதிபால தற்போதும் கிரிக்கெட் நிறுவனத்தில் சில பதவிகளை வகிக்கின்றார். 2016 ஆம் ஆண்டு பத்து 21 விளையாட்டுத்துறை சட்டத்திற்கு அமைய பந்தயம் செய்வது அல்லது அதனுடன் சார்ந்த தொழில்முயற்சிகளில் தொடர்புபட்டால், கிரிக்கெட் அல்ல விளையாட்டு நிர்வாகத்தின் எந்தவொரு பதவிகளையும் வகிக்க முடியாது எனக் கூறப்படுகின்றதாகவும் தன்னிடம் அதற்கான சாட்சியங்களுடன் ஆதாரங்களும் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

நடத்தப்பட்ட தேர்தலில் நானும் போட்டியிட்டேன். தேர்தல் கொள்கையற்ற, சூது விளையாட்டுடன் தொடர்புடைய, திருட்டுக்கு வழிவகுப்போருக்கே அங்கு வாக்களிப்பபடுகின்றமையால் ஒருபோதும் கிரிக்கெட் தேர்தலுக்கு சென்று என்னால் வெற்றிபெற முடியாது என கூறியுள்ளார்.

இந்தநிலையில், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை பார்வையிடுவதற்கு தற்போதே 30 பிளட்டினம் டிக்கெட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பாரியளவான பணமாகும். இது பாரிய டிக்கெட் ஊழலாகும். ஆட்டநிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்கு நாட்டில் தனியான அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதான் எமக்கு கிடைத்த பாரிய வரப்பிரசாதமாகும். கிரிக்கெட் விளையாட்டில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நாடாக நமது நாடு காணப்படுவதாக குறித்த அலுவலகத்தினூடாக வௌிக்கொணரப்பட்டதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தயாசிறி ஜயசேகர அவருடைய பிங்கிரிய தொகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்துள்ளார். 52 மில்லியன் ரூபா செலவில் அது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 52 மில்லியன் ரூபா செலவில் இந்த மைதானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆராயுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தான் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இவ்வாறு அனைத்து தகவல்களையும் உறுதிப்படுத்தி அதற்கான ஆவணங்களை சபையில் சமர்ப்பித்தார்.

இதனால் சேறுபூசும் வகையில் திலங்க சுமதிபால முன்வைத்த அனைத்து விடங்களுக்காகவும் எமது ஒளிபரப்பு நேரத்தை ஒதுக்க முடியாதுள்ளது.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் திலங்க சுமதிபால தொடர்பில் எம்மத்தியில் எவ்வித பாகுபாடும் கிடையாது.

அவர்களை விட அதிக நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் எமது நிறுவனம் இலங்கையின் விளையாட்டுத் துறைக்காக அர்ப்பணித்துள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

ஆகவே, ஆதாரங்களுடன் முன்வைக்கப்படுகின்ற அனைத்து தகவல்களையும் செய்தியில் வெளியிடுவதற்கு நாம் பின்வாங்கப்போவதில்லை என்பதை நினைவுபடுத்துகின்றோம்.

இந்தநிலையில்,

ஹெட்டிபொல விளையாட்டரங்கு எமது வட மேல் மாகாணத்தின் கேந்திர நிலையமாகும். குருநாகலுக்கும் புத்தளத்திற்கும் இடையே ஹெட்டிபொல தெரிவுசெய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் 40 மில்லியனை 30 வருடங்கள் வரை ஒதுக்கியுள்ளோம். வருடாந்தம் 15 மில்லியன் தொடக்கம் 20 மில்லியன் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தம்பி மீது கோடறியால் தாக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்காக ஜனாதிபதி இராஜினாமா செய்யவில்லை. அமைச்சர் பைசர் 5 மில்லியனை எடுக்க முயற்சித்தாராம். ஆம். முயற்சித்தார். நாம் இருந்திருந்தால் அந்த முயற்சிகூட மேற்கொள்ளப்பட்டிருக்காது. 1,85,000 வேறு நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். ஆனால் நாம் அந்தப் பணத்தை மீள பெற்றுக்கொள்வோம். இன்னமும் சைபர் தாக்குதல் நடந்ததா என்பது எமக்கு தெரியாது. ஏனெனில் எமக்கு நட்டம் ஏற்படவில்லை. ஆனாலும் அதற்கான காரணம் என்ன

என திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கவேண்டிய பல மில்லியன் டொலர் பணத்தை பேங்கொக் வங்கிக்கணக்கு ஊடாக வேறு ஒரு நாட்டிற்கு அனுப்பிவைக்கும் முயற்சி தொடர்பில் நாம் தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தோம்.

அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் இது தொடர்பிலான முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்திலேனும் முன்வைப்பதற்கு தயங்கியபோது நாம் வெளியிட்ட தகவல்கள் மற்றும் ஏனைய விடயங்களை கருத்தில்கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவில் இது தொடர்பில் முறைப்பாடு செய்தனர்.

நாம் தொடர்ச்சியாக வெளியிட்ட செய்திகளின் விளைவாகவே அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தனர்.

இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என திலங்க சுமதிபால கூறுகின்றார்.

ஆனால், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கனணி கட்டமைப்பு எவ்வித சைபர் தாக்குதலுக்கும் இலக்காகவில்லை என அந்த நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப்பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி பொறுப்புடன் கூறியுள்ள நிலையிலேயே திங்க சுமதிபால இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்