அர்ஜூன மகேந்திரனை ஒப்படைப்பதில் சிங்கப்பூரின் ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி

அர்ஜூன மகேந்திரனை ஒப்படைப்பதில் சிங்கப்பூரின் ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2019 | 6:00 pm

Colombo (News 1st) மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய முக்கிய நபரை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது குறித்து, சிங்கப்பூர் அரசாங்கம் தனது கொள்கையை இதுவரை தௌிவுபடுத்தவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சிங்கப்பூர் பிரதமருடன் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு திட்டத்தை வௌியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, இலஞ்ச ஊழலை ஒழிப்பது தொடர்பிலே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

வரலாற்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளையான மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் தான் நியமித்த ஆணைக் குழுவினூடாக மக்கள் மத்தியில் அது தொடர்பில் காணப்பட்ட நம்பிக்கையீனம் மற்றும் பின்னடைவான கருத்துக்களை மாற்றியமைத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு எதிராக சில விசாரணைகள் முன்னெடுக்கப்படவிருந்ததாகவும் அது அரச நிர்வாகத்தில் இடம்பெற்ற பலவீனமான செயற்பாடு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி எண்ணக்கருக்குள் முன்னேறிச் செல்வதற்குள்ள முக்கிய சவாலாக ஊழல் மோசடிகள் இருக்குமானால் அதனை ஒழிப்பதற்கு நாட்டை நேசிக்கின்ற அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தைப் பாதுகாப்பதை அன்றி, நாட்டின் உண்மையான நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு எவரும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அது குறித்து வௌிப்படையாக பேசுவது இல்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்