உலகக் கோப்பைக்கு உரிமை கோரி 23 வருடங்கள்

உலகக் கோப்பைக்கு உரிமை கோரி 23 வருடங்கள்

உலகக் கோப்பைக்கு உரிமை கோரி 23 வருடங்கள்

எழுத்தாளர் Fazlullah Mubarak

17 Mar, 2019 | 8:20 pm

சர்வதேசத்தின் கவனத்தை இலங்கையின் பால் ஈர்த்து உலகை மெய்சிலிர்க்க வைத்து கிரிக்கெட் உலக சாம்பியன் பட்டத்தை இலங்கை சுவீகரித்து இன்றுடன் 23 வருடங்களாகின்றன.

1996 ஆம் ஆண்டு இதுபோன்றதொரு நாளில் இலங்கை கிரிக்கெட் அணி அந்த மகத்தான வெற்றியை ஈட்டியது.

1996 உலகக் கிண்ணக் கிரிக்கெட்தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 17 திகதி பாகிஸ்தானின் லாகூர் கடாபி மைதானம் உலக கிரிக்கெட் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

அங்கிருந்த ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையின் தேசியக்கொடியை ஏந்தி தமது ஆதரவை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

போட்டியின் 46 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை வீசுவதற்கு அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரான கிளென் மெக்ராத் தயாரானபோது அந்தப் பந்தை அப்போதைய இலங்கை அணித்தலைவரான அர்ஜூன ரணதுங்க எதிர்கொண்டார்.

இலங்கை வெற்றிபெற அந்தத் தருணத்தில் ஓர் ஓட்டம் மாத்திரமே தேவையாக இருந்தது.

போட்டியில் அவுஸ்திரேலியா 241 ஓட்டங்களைப் பெற்றதுடன் பதிலளித்தாடும் இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்களைப் பெற்று சமநிலையை அடைந்திருந்தது.

மெக்ராத்தின் பந்தை அர்ஜூன ரணதுங்க தனது துடுப்பால் லாவகமாக எதிர்கொண்டார்.

பந்து பௌண்டறியைக் கடக்க ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்துடன் கிரிக்கெட் ஜாம்பவான்களை வீழ்த்திய இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை சூடியது.

உலக கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அந்தத் தருணம் குறுகிய கால வேலைத்திட்டமல்ல.

இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் அந்தஸ்த்து கிடைத்த நாள் முதல் உலக சாம்பியனாகும் வரை இலங்கை கிரிக்கெட்டுக்காக தமது காலத்தையும், செல்வத்தையும், உழைப்பையும் அர்ப்பணித்த பலர் உள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டை உண்மையாக நேசித்த மக்கள், அப்போதைய அதிகாரிகள் 1981 ஜூலை 21 ஆம் திகதி இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் அந்தஸ்த்து கிடைப்பதற்கு முன்பிருந்தே பொறுப்புகளை சரிவர நிறைவேற்றியிருந்தார்கள்.

எனினும், 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணிக்கு 23 வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து திரும்பிப் பார்ப்பதற்கு இன்றைய நாள் உகந்ததாகும்.

96 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட போது இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஆனா புஞ்சிஹேவா செயற்பட்டார்.

 

ஆனா புஞ்சிசேவாவின் சிறப்பான சேவையின் பின்னர் இலங்கை கிரிக்கெட் தலைவர் பொறுப்புக்கு வந்தாலும் இந்நாட்டு கிரிக்கெட் விளையாட்டுக்காக இல்லாமல் தனது பதவிக்காக மற்றும் ஏனைய இலாபங்களுக்காக செயற்பட்டார்களே தவிர இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக என்ன செய்தார்கள் என்பதே கேள்விக்குறியாகும்.

எவ்வாறாயினும், அதற்கு இடையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடைக்கால நிர்வாகக் குழு இருந்த காலத்தில் இலங்கை அணி தொடர்ச்சியாக போட்டிகளையும், தொடர்களையும் வெற்றிகொண்டதும் முக்கிய விடயமாகும்.

எனினும், 2003 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் மீண்டும் அதிகாரப் போட்டி சூதாட்டமாக மாறியது.

பிரதான தரப்புகள் சில மற்றும் பிரதான நபர்களிடையே பணத்துக்காக இலங்கை கிரிக்கெட் விளையாட்டின் அதிகாரம் மாறி மாறி சென்றது.

அதன் இறுதிப் பலனே தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணியின் நிலைமை.

கடந்த காலத்தில் ஒளிபரப்பு உரிமத்துக்காக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய நிதி வங்கிக் கணக்குகள் ஊடாக வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிட முயற்சிக்கப்பட்ட விடயம் இன்றும் ரகசியமாகவே உள்ளது.

அத்துடன் அந்த ஒளிபரப்பு உரிமத்தில் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் எதிர்காக வெளிநாட்டு வங்கியில் வைப்பிலிடப்பட முயற்சிக்கப்பட்டது என்பதும் விடை கிடைக்க கேள்வியாகவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக கணக்காய்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்டோர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு வருகைதந்ததன் ஊடாக அது எந்தளவுக்கு பாரதூரமான நிலைமை புலப்படுகின்றது.

எதிர்கால கிரிக்கெட்டுக்காக பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்த தற்போதைய கிரிக்கெட் அதிகாரிகளிடம் உரிய திட்டமிருப்பதாகத் தெரியவில்லை.

96 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம், 2014 ஆம் ஆண்டு உலக இருபதுக்கு20 சாம்பியன் பட்டம் என்பவற்றை வென்றுள்ள இலங்கை அணிக்கு 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்காக இன்னும் 74 நாட்கள் எஞ்சியுள்ள நிலையிலும் இன்னும் அதற்கு உரிய திட்டமொன்று நம்மிடம் இருக்கின்றதா என்பதும் சந்தேகமே.

தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போல் 2017 ஆம் ஆண்டு அணித்தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்வரும் இலங்கை கிரிக்கெட்டுக்கு 2019 உலகக் கிண்ணம் தொடர்பில் காத்திரமான திட்டமேதும் இருப்பதாக தெரியவில்லை.

உலகக் கிண்ணத் தொடருக்கான அணியை தெரிவுசெய்வதற்கு தேசிய போட்டித் தொடரை நடத்த கிரிக்கெட் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

1996 ஆண்டில் நாடு பயங்கரவாதத்தின் அச்சத்துக்கு மத்தியில் நமது நாடு ஈட்டிய அபரிமிததான வெற்றியை அடுத்து இன, மத பேதங்களை மறந்து சகல இலங்கையர்களும் ஒன்றிணைந்து கைகோர்த்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தேசிய அணி வீரர்கள் உள்ளிட்டவர்கள் தனிப்பட்ட விவகாரங்களுக்காக அணியில் பிளவுபட்டு இருக்கும் இந்தக் காலத்தில் மீண்டும் நாட்டு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அசாததியமான ஒரு வெற்றியை கொண்டுவர இலங்கை கிரிக்கெட்டினால் முடியுமா?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்