உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் இந்தியா

2020 பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றது இந்தியா

by Bella Dalima 16-03-2019 | 5:28 PM
சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் அடுத்த ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. சர்வதேச கால்பந்து சம்மேளனம் ​(FIFA) சார்பில் 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், அடுத்த ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. இது தொடர்பாக நேற்று மியாமியில் நடந்த FIFA கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இந்திய கால்பந்து சங்கம், 2020 இல் 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தவுள்ளது. இதனை இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேலும் உறுதி செய்துள்ளார். 2017 ஆம் ஆண்டு 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை போட்டியை இந்தியா வெற்றிகரமாக நடத்தியமை குறிப்பிடத்தக்கது.