துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு விளக்கமறியல்

நியூஸிலாந்து கிரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபருக்கு விளக்கமறியல்

by Bella Dalima 16-03-2019 | 7:24 PM
49 பேரின் உயிரைக் காவுகொண்ட நியூஸிலாந்து கிரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டை நடத்திய 28 வயதான Brenton Tarrant அவுஸ்திரேலிய பிரஜை என கருதப்படுகின்றது. கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏப்ரல் 5 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Brenton Tarrant-உடன் மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவர்கள் மீது குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. நியூஸிலாந்து கிரைஸ்ட்சர்ச்சில் நேற்று பிற்பகல் 1.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் உயிரிழந்ததுடன், நியூஸிலாந்தில் தற்போது துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பங்களாதேஷ் பிரஜைகள் டாக்காவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.