by Bella Dalima 16-03-2019 | 7:52 PM
நியூஸிலாந்தில் நடைமுறையிலுள்ள துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து க்ரைஸ்ட்சர்ச் பகுதியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நேற்று (15) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்ததுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பில் தலைநகர் வெலிங்டனில் ஊடகவியலாளர்களிடம் பேசிய நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், நியூசிலாந்தில் நடைமுறையில் உள்ள துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலில் பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா, இந்தோனேஷியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த 5 வயது குழந்தை ஆக்லான்ட் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பள்ளிவாசல்களுக்கு அருகில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு தற்போது மீள்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் பகுதியில், துப்பாக்கிச்சூட்டில் பலியான வேற்று நாட்டவர்களின் இறுதிக்கிரியைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.