சர்வதேச விசாரணை கோரி யாழ்ப்பாணத்தில் மக்கள் எழுச்சி பேரணி

by Staff Writer 16-03-2019 | 4:38 PM
Colombo (News 1st) போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று மக்கள் எழுச்சி பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் இந்த மக்கள் எழுச்சி பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளும் இதன்போது வலியுறுத்தப்பட்டன. யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் காலை 10 மணிக்கு இந்த மக்கள் எழுச்சி பேரணி ஆரம்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன், பேரணி பலாலி வீதியூடாகப் பயணித்து கந்தர்மடம் சந்தியை சென்றடைந்தது. அங்கிருந்து ப்ரவுன் வீதியூடாக யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக பயணித்து, யாழ். மாநகர சபை மைதானத்தை பேரணி சென்றடைந்தது. இதனையடுத்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நவரத்தினம் திவாகரால் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.