கேப்பாப்புலவு காணி: சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 16-03-2019 | 4:05 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் எஞ்சியுள்ள 70 ஏக்கர் காணிகளையும் விடுவிக்க வேண்டும் என கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார். ஆயுதப்படையினரின் ஒத்துழைப்புடன் கேப்பாப்புலவில் படையினர் வசமிருந்த பெருமளவு காணிகளை ஜனாதிபதி விடுவித்துள்ளதாக இரா.சம்பந்தனின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள இரா.சம்பந்தன், அது தொடர்பில் நேரடியாக கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சுடனும் பாதுகாப்பு படையினருடனும் கலந்துரையாடியுள்ளதாக இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் காணிகள் விடுவிக்கப்படும் என்பது ஜனாதிபதியின் கொள்கையாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அதற்கமைய, படையினர் வசமுள்ள காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் தனது கடிதத்தினூடாக வலியுறுத்தியுள்ளார். கேப்பாப்புலவு காணிகள் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலமாக பயன்படுத்திய காணிகள் எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமது பூர்வீகக் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி 2017 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் அந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு இரா.சம்பந்தன் கொண்டு சென்றுள்ளார். பாதுகாப்புத் தேவைகளுக்கு காணி தேவைப்படும் பட்சத்தில், அரச காணிகளை பயன்படுத்த முடியும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிப்பு தொடர்பில் பரிசீலிக்க ஜனாதிபதிக்கு விருப்பம் உள்ளதாக தாம் அறிவதாகவும், அதற்கமைய கேப்பாப்புலவு காணியையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதிக்கு இரா.சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் தோப்பூர் பிரதேச செயலாளர் பிரிவு என்ற ஒரு புதிய பிரிவொன்றை பிரிப்பதற்கான முன்மொழிவு தொடர்பில் அவர் இந்தக் கடிதத்தில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இந்த முன்மொழிவிற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்பிக்கப்படவுள்ளதாக தனக்கு அறியக்கிடைத்துள்ளதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும், இந்த விடயம் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தன்னுடனும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் எவ்வித கலந்துரையாடல்களையும் நடத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படாதிருப்பதற்கு அனைத்து பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடுவது அவசிம் எனவும் பிரதமருக்கான கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தோப்பூர் பிரதேச செயலகத்திற்கான இறுதித் தீர்மானம் எட்டப்படுவதற்கு முன்னர் அதனை தடுத்து நிறுத்துமாறும் இரா.சம்பந்தன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்