மோசடி இடம்பெறாவிட்டால் முறிகள் தொடர்பில் ஆராயும் தௌிவுள்ள குழுவினரை பிரதமர் ஏன் நியமிக்கவில்லை?

by Staff Writer 15-03-2019 | 8:12 PM
Colombo (News 1st) முறிகள் மோசடி தனது தவறு அல்லவென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (14) பாராளுமன்றத்தில் கூறியதாக இன்று டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. முறிகள் கொடுக்கல் வாங்கலில் மோசடி இடம்பெறவில்லை என பிரதமர் தொடர்ந்தும் தெரிவித்ததுடன், சுமத்தப்படும் குற்றச்சாட்டை பாதுகாக்கும் கொள்கையிலும் ஈடுபட்டு வந்தார். 2019 மார்ச் மாதம் 9 ஆம் திகதி இந்த மோசடி தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் முதன்முறையாக வௌிக்கொண்டு வந்ததன் பின்னர் தொடர்ந்தும் சமூக மற்றும் அரசியல் செயற்பட்டாளர்கள் இது குறித்து பேசும்பொழுது, அச்சமயம் வௌிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி இது குறித்த ஆராயுமாறு தனது செயலாளருக்கு உத்தரவிட்டார். ஜனாதிபதி செயற்படும் முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சிக்குள் நெருங்கிய மூன்று சட்டத்தரணிகள் உள்ளடங்கிய குழுவை நியமித்தார். காமினி பிட்டிப்பன, மகேஸ் களுகம்பிட்டிய மற்றும் சந்திமால் மென்டிஸ் ஆகியோர் அடங்கிய குழு இறுதியில் ரணில் விக்மரசிங்கவிற்கும் அர்ஜூன மகேந்திரனுக்கும் வௌ்ளை சுண்ணாம்பு பூசும் செயற்பாட்டையே மேற்கொண்டது. மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் நியமித்த மூன்று சட்டத்தரணிகளுக்கும் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எவ்வித தௌிவும் இல்லை என்பது முழு நாடும் அறிந்த விடயமாகும். மோசடி இடம்பெறவில்லை என்றால் முறிகள் தொடர்பில் தௌிவுள்ள ஒரு குழுவை நியமித்து இது தொடர்பில் ஆராய்வதில் ஏன் பிரதமர் கவனம் செலுத்தவில்லை. நேற்று நடைபெற்ற தனது அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பதில் அளித்து உரையாற்றும் போது முறிகள் மோசடி தனது தவறு அல்லவென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக இன்று டெய்லி மிரர் பத்திரிகையில் முதல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்