நியூசிலாந்தில் வழிபாட்டுத்தலங்களில் துப்பாக்கிச்சூடு: 49 பேர் பலி, உலக தலைவர்கள் கண்டனம்

by Staff Writer 15-03-2019 | 3:31 PM
நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள மத வழிபாட்டுத்தலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் உறுதிப்படுத்தியுள்ளார். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தோரில் 20-க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்நாளானது நியூஸிலாந்தின் கறுப்பு தினங்களில் ஒன்று என பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார். கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இரண்டு மதவழிபாட்டுத் தலங்களில் இன்று துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் வழிபாட்டில் கலந்துகொண்டவர்களே துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகியுள்ளனர். பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அல் நூர் வழிபாட்டுத் தலத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும், அப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக தமது அணியினர் வௌியேறியதாக அணித்தலைவர் தமிம் இக்பால் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். பல துப்பாக்கிகளுடன் காரில் வந்த ஆயுததாரி, வழிபாட்டுத் தலத்திலிருந்த அனைவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட காணொளிகள் இணையத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. எனினும், காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் அவுஸ்திரேலிய பிரஜையொருவரும் உள்ளதை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் உறுதிப்படுத்தியுள்ளார். துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து க்ரைஸ்ட் சர்ச்சிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் கண்டனம் வௌியிட்டுள்ளனர். துருக்கி, பிரித்தானியா, ஸ்கொட்லாந்து, பாகிஸ்தான் நாடுகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுபதாபங்களை தெரிவித்துள்ளதுடன், தாக்குதலுக்கு கண்டனத்தையும் வௌியிட்டுள்ளனர். இது திட்டமிட்டதொரு செயல் என நியூஸிலாந்தின் பொலிஸ் மா அதிபர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.