சூழல் மாசடைதலும் வறுமையும் ஒன்றோடொன்று பிணைந்துள்ள காரணிகள்: சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி உரை

by Staff Writer 14-03-2019 | 6:48 PM
Colombo (News 1st) கென்யாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நைரோபி நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத்தொடரில் உரையாற்றியுள்ளார். சுற்றாடலுக்கு எழுந்துள்ள சவால்கள், நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திகளுக்கான புத்தாக்கத் தீர்வு எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்று வருகின்றது. கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவின் அழைப்பை ஏற்று விசேட அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். பிரதான மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக்கான புதிய தொழில் முயற்சிக்கான திட்டங்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார். ஐ.நா சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத்தொடரில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட அரச தலைவர்களும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இராஜதந்திர அதிகாரிகளும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, வறுமையே சுற்றாடல் மாசடைவதற்கான காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சூழல் மாசடைதலும் வறுமையும் ஒன்றுடனொன்று பிணைந்துள்ள காரணிகள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.