சந்திக்க ஹத்துருசிங்கவை திருப்பி அழைக்க தீர்மானம்

சந்திக்க ஹத்துருசிங்கவை திருப்பி அழைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானம்

by Staff Writer 14-03-2019 | 8:40 PM
Colombo (News 1st) தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 4 -0 என இலங்கை தோல்வியடைந்த நிலையில், பிரதம பயிற்றுநரான சந்திக்க ஹத்துருசிங்கவை திருப்பி அழைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. புதிய அணித்தலைவரான திமுத் கருணாரத்னவின் வழிநடத்தலில் இலங்கை அணி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடர் வெற்றியை ஈட்டினாலும் மீண்டும் சர்வதேச ஒருநாள் தொடரில் தோல்விகளால் துவண்டுபோயுள்ளது. 14 போட்டிகளில் அணித்தலைவராக செயற்பட்டு ஒரு போட்டியிலேனும் அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல முடியாத லசித் மாலிங்கவினால் இனிமேலும் இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்த முடியுமா என்பது இலங்கை ரசிகர்களின் சந்தேகத்திற்குரிய கேள்வியாகும். எதிர்வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இணைந்துகொள்ளும் எதிர்பார்ப்பில் இருக்கும் லசித் மாலிங்க இலங்கை அணியின் பொறுப்பை உணராதவர் என்பது விமர்சகர்களின் கருத்தாகும். அவ்வாறிருக்க, தேசிய மட்ட கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்களுடன் அபரிமித ஆற்றல்களை வெளிப்படுத்தி தென் ஆபிரிக்க விஜயத்தில் இணைந்த அஞ்சலோ பெரேராவுக்கு ஒருநாள் தொடரில் நான்கு போட்டிகள் முடியும் வரை வாய்ப்பளிக்கப்படாதது வியப்பிற்குரியதாகும். முதற்தர கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரட்டை சதமடித்த முதல் இலங்கையராகவும் உலகின் இரண்டாமவராகவும் சாதனை ஏட்டில் பதிவான அஞ்சலோ பெரேராவின் திறமைக்கு வேறு சான்றுகள் தேவையில்லை. இலங்கை அணி தொடர் தோல்விகளால் துவண்ட போதிலும் அஞ்சலோ பெரேரா தொடர்பாக தீர்மானம் எடுக்க முடியாத இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் ஹத்துருசிங்கவை திருப்பி அழைப்பது எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் அவரது திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவே என கூறப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநர் பொறுப்பை ஏற்ற நாள் முதல் இதுவரை ஹத்துருசிங்க எதிர்பார்க்கப்பட்ட பெறுபேற்றை பெற்றுக்கொடுத்தாரா? அணிக்குள் வீரர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்திருப்பது கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. நியூஸ்ஃபெஸ்ட்டும் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியது. அதேபோன்று, உயரிய சம்பளம் பெறுவதோடு எல்லையற்ற அதிகாரம் கொண்ட ஒப்பந்தமிடப்பட்டுள்ள ஹத்துருசிங்க தொடர்பாக தீர்மானம் எடுக்க இனிமேலும் தாமதிக்கக்கூடாது. ஒப்பந்த பிரகாரமோ அல்லது அதற்கு அப்பாலோ மறைமுகக் கொடுப்பனவுகளும் இடம்பெறுவதாக கடந்த காலத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அல்லது உரிய அதிகாரிகளைக் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.