குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று

வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் வாசிப்பு இன்று

by Staff Writer 14-03-2019 | 6:54 AM
Colombo (News 1st) வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று (14) நடைபெறவுள்ளது. இன்றைய தினம் பிரதமர் வகிக்கும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சிற்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளன. இன்று காலை 9.30 மணியளவில் சபை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளதுடன், காலை 10 மணியளவில் விவாதங்கள் ஆரம்பமாகவுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி, பிரதமரின் செயலகம், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், அமைச்சரவை அலுவலகங்கள் மற்றும் அரச சேவைகள், நீதிச்சேவை, பொலிஸ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகளைத் தோற்கடிப்பதாக ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் அண்மைக் காலமாக கூறிவந்ததுடன், அவர்கள் சபையில் வாக்கெடுப்பினை கோரியிருந்தனர். எனினும், சபை முதல்வரும் பிரதமரும் வாக்கெடுப்பு தேவையில்லை என அறிவித்தனர். இதற்கமைய, ஆட்சேபனை மாத்திரம் பதிவுசெய்யப்பட்டு ஜனாதிபதிக்கான ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.