கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: டெலோ அறிவிப்பு

கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: டெலோ அறிவிப்பு

கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: டெலோ அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2019 | 7:41 pm

Colombo (News 1st) வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என டெலோ அறிவித்துள்ளது.

கட்சியின் மத்திய அரசியல் குழு தீர்மானங்களுக்கு மாறாக வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக கோடீஸ்வரன் வாக்களித்துள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் என்.ஶ்ரீ காந்தா தெரிவித்துள்ளதாக தமிழ் பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என்ற வாக்குறுதி கிடைக்காமல் வாக்களிக்கக்கூடாது என்று கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதை மீறி க.கோடீஸ்வரன் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.

எனினும், கட்சித் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சியின் செயலாளர் ஶ்ரீகாந்தா குறித்த பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்கினை பதிவு செய்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்