எவ்வித நிபந்தனைகளும் இன்றியே த.தே.கூ வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தது: ரவி கருணாநாயக்க

by Bella Dalima 14-03-2019 | 8:15 PM
Colombo (News 1st) எவ்வித நிபந்தனைகளும் இன்றியே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்ததாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வவுனியாவில் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் எனவும் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே ஒரேயொரு நிபந்தனை எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். 4 வருடங்கள் கடந்துள்ள நிலையில், விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிபந்தனைகளால் எத்தகைய அனுகூலம் கிட்டியது எனவும் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார். வவுனியாவில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தினை பெற்றுக்கொள்ளக்கூடிய மின்கலத் தொகுதிக் கட்டமைப்பை இன்று திறந்து வைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தனியார் நிறுவனமொன்றினால் 380 மில்லியன் ரூபா செலவில் வவுனியா - மாமடுவில் இந்தக் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளாந்தம் 7000 யூனிட் மின்சாரத்தினை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.