மாத்தறை - பெலியத்த ரயில் சேவை ஆரம்பமாகவுள்ளது

மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான ரயில் சேவை 8ஆம் திகதி முதல் ஆரம்பம்

by Staff Writer 13-03-2019 | 7:31 AM
Colombo (News 1st) மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான ரயில் சேவை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, தற்போது கரையோர மார்க்கமாக கொழும்பு - கோட்டையிலிருந்து மாத்தறை வரை பயணிக்கும் அனைத்து ரயில்களும் பெலியத்த வரை பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பெலியத்த வரையான தூரம் 26 கிலோமீற்றர்களாகும். இந்த ரயில் மார்க்கத்தில், கெகணதுர, பம்பரென்த, வெவுருகன்னல, பெலியத்த ஆகிய ரயில் நிலையங்களும் பிலதுவ மற்றும் வெஹெரஹேன ஆகிய உப ரயில் நிலையங்களும் உள்ளடங்குகின்றன. மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ள ரயில்பாதைத் திட்டமானது 3 கட்டங்களாக நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் கட்டமாக பெலியத்தயிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை 48 கிலோமீற்றர் தூரமும் மூன்றாம் கட்டமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் வரையிலான 39 கிலோமீற்றர் தூரமும் ரயில்பாதை அமைக்கப்படவுள்ளது. இலங்கையில் மிக நீளமான சுரங்க ரயில் பாதை மாத்தறை - பெலியத்த பாதையிலேயே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.