நாடளாவிய ரீதியில் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு: கற்றல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

by Staff Writer 13-03-2019 | 8:27 PM
Colombo (News 1st) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுகயீன விடுமுறையை பதிவு செய்து அவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாததால், அநேகமான பாடசாலைகளின் செயற்பாடுகள் இன்று முற்றாக ஸ்தம்பிதமடைந்தன. அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கி, சம்பளத்தை அதிகரித்தல், 2016 ஆம் ஆண்டின் பின்னர் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய சம்பளத் திட்டத்தை மீண்டும் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இன்று ஆசிரியர்களின் வருகை குறைவாக இருந்தது. பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் கைகளில் கறுப்புப் பட்டியணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் இன்று பாடசாலை முன்றலில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வவுனியா மாவட்டத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டதுடன், புதுக்குளம் மகா வித்தியாலயம் மற்றும் முருகனூர் சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர்கள் பாடசாலை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். கிளிநொச்சி மகா வித்தியாலம் மற்றும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய ஆசிரியர்களும் நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாடசாலை முன்றலில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு - தண்ணீரூற்று திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளின் ஆசிரியர்களும் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாணத்திலும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலும் பணிப்பகிஷ்கரிப்பிலும் இன்று ஈடுபட்டனர். மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. அத்துடன், திருகோணமலை மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று கோலாவில் விநாயகர் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்களும் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். புத்தளம் இந்து மத்திய கல்லூரி மற்றும் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் இன்று கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. மாணவர்கள் பாடசாலை சென்று மீண்டும் வீடு திரும்பினர். இதேவேளை, நுவரெலியா - ஹோல்ப்ரூக் தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர்களும் அதிபர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர். மாத்தளையிலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாத்தளை நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். யட்டியந்தோட்ட புனித சாந்த மரியாள் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் கராகொட முஸ்லிம் மகா வித்தியாலயம் யட்டியந்தோட்ட என். எம். பெரேரா மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இன்று இயங்கவில்லை. மேலும், நீர்கொழும்பிலுள்ள சில பாடசாலைகளிலும் இன்று மாணவர்களின் வருகை குறைவாக இருந்ததுடன், கற்றல் நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. கம்பளை - சாஹிரா கல்லூரி ஆசிரியர்களும் அதிபரும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துகொண்டனர்.