இலங்கை அணி தொடர்பில் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா

by Staff Writer 13-03-2019 | 2:33 PM
Colombo (News 1st) அணியில் இருக்கின்ற இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அதன்மூலம் துடுப்பாட்ட வரிசையை மேம்படுத்த வேண்டும் என, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று வைபவமொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் இலங்கை அணி தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களிலேயே வீரர்கள் விளையாட உள்ளமையால், அதிசிறந்த துடுப்பாட்ட வீரர் ஒருவர் அவசியம் எனவும் கூறியுள்ளார். எமது அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவிற்கு நீண்ட நாட்களாக டெஸ்ட் குழாத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்தநிலையில், எமது நாட்டில் திறமை இல்லை எனக் கூறுவதை எந்தவொரு சந்தரப்பத்திலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரவிந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். எம்மவர்களிடம் அதீதமான திறமை இருக்கின்றது. எமது வீரர்களை சரியான நேரத்தில் சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும். உலகக்கிண்ணத்திலும் சரியான இடத்தில் சரியான வீரரைத் துடுப்பெடுத்தாடுவதற்குக் களமிறக்கும் பட்சத்தில் சிறந்த பெறுபேற்றை பெற முடியும் எனக் கூறியுள்ளார். கிரிக்கெட் நிர்வாகத்தில் எவர் இருந்தாலும் அவரால் மாற்றமொன்று ஏற்படுகின்றதா என்பது தெரியவில்லை. இந்தநிலையில், பாரிய தொகைக்கு பயிற்றுநர்களை நியமிப்பது பயனற்ற விடயம் எனத் தெரிவித்த அரவிந்த டி சில்வா, சிறிய தவறொன்றை செய்துவிட்டு அதனை சரிசெய்ய முயற்சிக்கும்போது, அதற்குள் சில வருடங்கள் சென்றுவிடுகின்றது. அனுபவமும் அறிவாற்றலும் பொருந்திய ஒருவர் நியமிக்கப்பட்டால் மாத்திரமே குறைந்த ஓட்டங்களைப் பெறும் துடுப்பாட்ட வீரர்களை சரிசெய்யலாம் எனக் கூறியுள்ளார்.