UNHRC இல் கலந்துகொள்ள ஐவர் கொண்ட குழு நியமனம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்ள ஐவர் கொண்ட குழு நியமனம்

by Staff Writer 13-03-2019 | 1:26 PM
Colombo (News 1st) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் கலந்துகொண்டு விளக்கமளிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையிலான இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் பிரதி சொலிஷிட்டர் நாயகம் நெரின்பிள்ளை ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளின் முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி பேரவையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான பரிந்துரை தீர்மானம் எதிர்வரும் 21ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெனிவா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அசீஸ், பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்த ஜயசூரிய மற்றும் ஜெனிவாவுக்கான இலங்கைக் குழுவின் அதிகாரிகள் சிலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.