பங்களாதேஷ் கடத்தற்காரருக்கு இலங்கையருடன் தொடர்பு

பங்களாதேஷில் கைதானவர்களுக்கு இலங்கையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்பு

by Staff Writer 12-03-2019 | 5:45 PM
Colombo (News 1st) பங்களாதேஷில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பங்களாதேஷில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெண்ணொருவரும் அடங்குவதுடன், குறித்த பெண் பங்களாதேஷிலும் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களின் பிரதான சந்தேகநபராக அடையாளங்காணப்பட்டுள்ளார். சந்தேகநபரான பெண்ணுடன் இலங்கை பிரஜைகள் உள்ளிட்ட நால்வர் இணைந்து கடத்தல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பங்களாதேஷில் தலைமறைவாகியுள்ள முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பிரதான சந்தேகநபரான பெண் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், 2016 ஆம் ஆண்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதேவேளை, போதைப்பொருளை பகிரும் பிரதான மத்திய நிலையமாக இலங்கை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக ​போதைப்பொருள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஏனைய நாடுகளுக்கும் நாட்டிற்குள்ளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த கடத்தல் நடவடிக்கைகளுக்காக டிங்கி படகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் தொடர்பில் உடனடி சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.