ஜ.நா மனித உரிமை பேரவையும் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடும்

ஜ.நா மனித உரிமை பேரவையும் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடும்

எழுத்தாளர் Bella Dalima

12 Mar, 2019 | 7:33 pm

Colombo (News 1st) ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் தற்போது அதிகக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் நேற்று (11) கருத்துத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, போர்க்குற்றங்கள் மீது விசாணை நடத்தப்பட வேண்டும் என இம்முறையும் மனித உரிமை பேரவையின் தீர்மானம் தௌிவாகச் சொல்வதாகவும் அதற்கு பலமான ஆதரவைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன், சுயநல காரணங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் முழுமையான, உண்மையான விசாரணை இடம்பெற்று நீதி கிடைக்க வேண்டும் என்பது தான் தமது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிப்பதற்கான அறிக்கை ஒன்றினை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு மின்னஞ்சல் மூலம் சி.வி.விக்னேஷ்வரன் அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை, மூன்று விடயங்களை முன்வைத்து தமிழ் கட்சிகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலெட் (Michelle Bachelet) மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.

அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களாவன…

01. இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 31/4 ஆகிய பிரேரணைகளை
முழுமையாக அமுல்படுத்தத் தவறியமை, நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டாமை காரணமாக இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக்கூடாது

02. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்படும்  விசேட சர்வதேச தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில், ஐ.நா பொதுச்சபை மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபை ஆகியவற்றிற்கு பரிந்துரை செய்யுமாறு ஐ.நா மனித உரிமை பேரவையைக் கேட்டுக்கொள்ளுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகள்

ஆகியன முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரிடம் கையெழுத்துகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் இந்த கடிதத்தில் கையெழுத்தினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்டு வருவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் கூறினார்.

எனினும், அவ்வாறான எதுவும் இடம்பெறவில்லை எனவும் அது பொய்யான தகவல் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்ஜெனிவாவிலிருந்து நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு உறுதிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஐ.நா கூட்டத்தொடர்களில் தொடர்ச்சியாக பங்குபற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இம்முறையும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளார்.

அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி மஹிந்த சமரசிங்க, கலாநிதி சரத் அமுனுகம, வடமாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் பங்குபற்றவுள்ளனர்.

தாம் இம்முறை ஜெனிவாவிற்கு சென்று நிலைமையை எடுத்துக்கூறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் ஐ.நா கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் உறுதிப்படுத்தினார்.

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் இம்முறை மனித உரிமை பேரவை அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

2014 ஆம் ஆண்டு தொடக்கம் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஐ.நா கூட்டத்தொடர்களில் கலந்துகொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமுமாகிய அனந்தி சசிதரன் இம்முறை மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவில்லை.

தற்போது சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் நிலையில், ஜெனிவா செல்வதற்கான அனுமதியை அமைச்சிடம் கோரிய போதிலும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டமையே இம்முறை அமர்வில் கலந்துகொள்ளாமைக்கான காரணம் என தெரிவித்தார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில், எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை தொடர்பிலான பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலெட்டினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்யும் அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 8 ஆம் திகதி அது பகிரங்கப்படுத்தப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் இலங்கையும் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்தில் உள்ளடங்கிய விடயங்களை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் அறிக்கையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க செயற்பாட்டிற்கான இணைப்பு செயலகம் ஸ்தாபிக்கப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், தேசிய நல்லிணக்க செயலகம் ஆகிய நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பில் வௌியாகியுள்ள அறிக்கையில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொறுப்புக்கூறல் தொடர்பான செயற்பாடுகள் மந்தகதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறைந்தளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை குறைந்தளவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளதால், தொடர்ந்தும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என இன்று வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்