ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய இலங்கை அணியின் தோல்வி

ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய இலங்கை அணியின் தோல்வி

by Staff Writer 11-03-2019 | 10:16 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டு போட்டிகள் எஞ்சிய நிலையில், இலங்கை அணி இழந்திருக்கின்றமை ரசிகர்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. இறுதியாக விளையாடிய 4 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளமை கவலைக்குரியதாகும். 2017 ஆம் ஆண்டு முதல் 5 தலைவர்களின் வழிநடத்தலுடன் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் இலங்கை அணிக்கு, தற்போதைய நிலையிலும் உலகக் கிண்ணத்துக்கான சரியான பாதையை தேடியறிய முடியாதுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தின் உபதலைவராக நிரோஷன் திக்வெல்ல நியமிக்கப்பட்டாலும் கடந்த போட்டிகளில் தனது பொறுப்பை அவர் உரியமுறையில் நிறைவேற்றியுள்ளாரா என்பது கேள்விக்கு வித்திடுகின்றது. அவர் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நிறைவுக்கு வந்த 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 16 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார். ஒரு போட்டியில் பிரகாசிக்கவில்லை என்பதற்காக இலங்கை அணியின் நம்பிக்கை துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்கவை குழாத்திலிருந்து நீக்கியமை நியாயமானதா என்பது குறித்து கிரிக்கெட் அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். அவரை நீக்கியது நியாயமான காரணமாக தென்படின் தொடர்ச்சியாக பல போட்டிகளில் பிரகாசிக்காத ஒரு வீரருக்கு அணியில் எவ்வாறு இடம் வழங்கப்படுகின்றது. ஒரு காலத்தில் முதல்தர அணியாக வலம் வந்த இலங்கை அணிக்கு தற்போதைய நிலையில் 50 ஓவர்கள் முழுவதும் துடுப்பெடுத்தாட முடியாமல் போகின்றமை கவலையை தோற்றுவிக்கின்றது. முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் மீண்டும் இலங்கை குழாத்தில் இணைவதும் உறுதியில்லை. இந்நிலையில், உலக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 80 நாட்களே எஞ்சியிருக்கின்றன. இவையனைத்துக்கும் பின்னால் தற்போதைய நிலையில் இலங்கை அணியின் சர்வதேச ஒருநாள் தலைமைப் பொறுப்பு திமுத் கருணாரத்னவுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கழகமட்ட போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய வீரர்கள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் பெயரிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை வெற்றிப் பாதையில் இட்டுச்செல்வதற்கு திறமையான 11 வீரர்களே இலங்கை அணிக்குத் தேவையே ஒழிய 11 தலைவர்கள் அல்ல. குறைகளை நிவர்த்திசெய்து ஒன்றுபட்டு போட்டியில் வெற்றிவாகை சூடுவதை விடுத்து தோல்விக்கு காரணம் கூறி விரயமாக்குவதற்கு இன்னமும் காலம் இல்லை என்பதை எப்போது புரிந்துகொள்ளப் போகின்றார்கள்?