ஏப்ரலிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பிற்கான தேசிய திட்டம் முன்னெடுப்பு - ஜனாதிபதி

by Staff Writer 11-03-2019 | 9:07 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதியில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பிற்கான தேசிய திட்டத்தை முன்னெடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருளிலிருந்து பாடசாலைகளைக் காப்பாற்றுமாறு பல பாடசாலைகளிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கின்றமையால், அதனைப் பயன்படுத்தும் மாணவர்கள் அதிபர், ஆசிரியர்களை விட பலமானவர்களாக இருக்கின்றனர். இதனால், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாகக் கூறியுள்ளார். இந்தநிலையில், போதைப்பொருளை ஒழிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் அதன்பின்னர் போதைப்பொருள் ஒழிப்பிற்கான தேசிய திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.   இதேவேளை, கொகாவல மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்தார். கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்று இதன்போது திறந்து வைக்கப்பட்டதுடன், விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
சில சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களால் தவறிழைக்கப்படுகின்றது. எனினும் 99 வீதமான ஆசிரியர்கள் மாணவர்களை சிறந்த வழியில் கொண்டுசெல்வதற்காகவே தண்டிக்கின்றனர். அண்மையில் பிரம்புகளை எரிக்கும் நிகழ்வொன்றை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இவை அனைத்தும் அரசியல் நாடகமாகும். பிரம்புகளை எரிப்பதற்கு எனக்கும் அழைப்பு விடுத்தனர். நான் போகவில்லை. அன்று பாடசாலையில் அதிபர் அல்லது ஆசிரியர் பாடசாலையில் தண்டித்தால் அதனை வீட்டுக்குப் போய் கூறினால் பெற்றோர் என்ன கூறுவார்கள். நீ ஏதாவது தவறு செய்திருப்பாய் அதற்காவே தண்டித்திருப்பார்கள் என்று கூறுவார்கள். அது அன்று இருந்த கலாசாரம்
எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.