புத்தள கழிவுகளை அருவக்காட்டில் சேகரிக்க தீர்மானம்

புத்தளத்தின் கழிவுகளை அருவக்காடு கழிவகற்றல் மத்திய நிலையத்தில் சேகரிக்க தீர்மானம்

by Staff Writer 10-03-2019 | 11:11 AM
Colombo (News 1st) அருவக்காடு கழிவகற்றல் மத்திய நிலையத்திற்கு புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் கழிவுகளை சேகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினூடாக சேகரிக்கப்படும் கழிவுகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அருவக்காடு கழிவகற்றல் மத்திய நிலையத்தில் சேகரிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக, மாநகர சபைகள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சிமன்ற தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, நாளொன்றுக்கு 300 மெற்றிக் தொன் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை, அடுத்த வருடம் முதல் ரயில் ஊடாக அருவக்காடு கழிவகற்றல் மத்திய நிலையத்திற்கு கொண்டுசெல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 17 விசேட ரயில் பெட்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இந்த வருட இறுதிக்குள் ரயில் பெட்டிகள் கொள்வனவு செய்யப்படும் எனவும் மாநகர சபைகள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.