எத்தியோப்பியாவில் 157 பேரின் இறுதிப்பயணம்

எத்தியோப்பியாவிலிருந்து ஆரம்பமான 157 பேரின் இறுதிப் பயணம்

by Staff Writer 10-03-2019 | 9:47 PM

எத்தியோப்பியாவில் இருந்து கென்யாவின் நைரோபி நோக்கி பறந்து கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்துள்ளதாக, எத்தியோப்பிய விமான சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

149 பயணிகளையும் 8 விமான ஊழியர்களையும் ஏற்றிய ஈ.ரீ 302 பொயிங் 737 மெக்ஸ் விமானம், எத்தியோப்பிய நேரப்படி காலை 8.38 மணிக்கு எத்தியோப்பிய தலைநகர் Addis Ababa விலிருந்து கென்யாவின் நைரோபி நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. விமானம் வானில் பறக்க ஆரம்பித்து 6 நிமிடங்களில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் பதிவானது. காலை 8.44 மணியளவில் விமானத்திற்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பிஷப்ட்டு நகரிலிருந்து 40 மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானதுடன், பிஷப்ட்டு மற்றும் டப்ரே சைட் ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் விமானம் நொருங்கி வீழ்ந்துள்ளது. இதனால் விமானத்தில் பயணித்த 157 பேரும் பரிதானமாக உயிரிழந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்து விமானத்தை ஏற்றி அதனை மேல் வானில் நிலையான நிலைக்கு கொண்டுவரும்போது ஏற்பட்ட செங்குத்தான வேகம் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பிளைட் ராடர் 24 இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி ஜகர்த்தாவில் இருந்து 189 பயணிகளுடன் புறப்பட்டு ஒரு சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான விமானமும் பொயிங் 737 மெக்ஸ் ரக விமானமாகும். போயிங் நிறுவனத்தின் தரவுகளின்படி போயிங் 737 மெக்ஸ் விமானங்களே வரலாற்றில் மிக வேகமாக விற்பனை செய்யப்படும் விமானங்களாக அமைந்துள்ளன. விமான சேவையில் புதிதாக இணைந்துள்ள இந்த விமானத்தை 2016 ஆம் ஆண்டே போயிங் நிறுவனம் உற்பத்தி செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பில் தமது நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளதாக போயிங் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.