நீல வர்ணங்களின் மோதல்: புனித தோமஸ் கல்லூரி சாம்பியனானது

by Staff Writer 09-03-2019 | 4:42 PM
Colombo (News 1st) நீல வர்ணங்களின் மோதலில் 12 வருடங்களின் பின்னர் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி சாம்பியனானது. கொழும்பு ரோயல் கல்லூரிக்கு எதிராக இன்று நிறைவுக்கு வந்த வருடாந்த கிரிக்கெட் போட்டியை புனித தோமஸ் கல்லூரி அணி 7 விக்கெட்களால் வெற்றிகொண்டது. பாடசாலைகளுக்கான கிரிக்கெட் வரலாற்றில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த 140 ஆவது நீல வர்ணங்களின் மோதலில், கொழும்பு ரோயல் கல்லூரிக்கு எதிரான இந்தப் போட்டியில் 122 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய புனித தோமஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை கடந்தது. இந்த வெற்றிக்கு அமைவாக டி.எஸ்.சேனாநாயக்க ஞாபகார்த்த கிண்ணத்தை புனித தோமஸ் கல்லூரி அணி சுவீகரித்தது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரோயல் அணி 158 ஓட்டங்களையும், புனித தோமஸ் அணி 296 ஓட்டங்களையும் பெற்றன. 138 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த ரோயல் கல்லூரி அணி 259 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. புனித தோமஸ் கல்லூரி அணி இறுதியாக 2007 ஆம் ஆண்டு நீல வர்ணங்களின் மோதலில் வெற்றி பெற்றது. நீல வர்ணங்களின் மோதல் வரலாற்றில் புனித தோமஸ் மற்றும் ரோயல் அணிகள் தலா 35 வெற்றிகளைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.