கடுகதி ரயில்: கடன் ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளது

கொழும்பு கோட்டை - மாலபே இடையிலான குறுந்தூர கடுகதி ரயில் சேவைக்கான கடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது

by Staff Writer 09-03-2019 | 4:59 PM
Colombo (News 1st) கொழும்பு கோட்டைக்கும் மாலபேவிற்கும் இடையிலான குறுந்தூர கடுகதி ரயில் சேவைக்கான மார்க்கத்தை நிர்மாணிப்பதற்கான கடன் ஒப்பந்தம் எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. ஜப்பான் நட்புறவு நிதியத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தினூடாக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இந்த கடன் ஒப்பந்தத்தில் திறைசேரியின் செயலாளரும், JICA நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் கைச்சாத்திடவுள்ளனர். அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் மார்க்க நிர்மாணப் பணிகளை நான்கரை வருடங்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 6 நிமிடங்களுக்கு ஒரு தடவை குறித்த ரயில் மார்க்கத்தில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து மாலபேக்கு இடையில் 17 ரயில் நிலையங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், 23 நிமிடங்களில் பயணம் செய்யும் வகையில் இந்த புதிய திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருந்தி அமைச்சு தெரிவித்தது