by Bella Dalima 09-03-2019 | 5:12 PM
Colombo (News 1st) இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணையில் மிக முக்கிய திருப்பம் ஏற்பட்டிருப்பதாக ராமதாஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அது குறித்து சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் கூறியுள்ளமை தொடர்பிலும் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததை ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் புலன் விசாரணை உறுதி செய்த நிலையில், அதனடிப்படையில் நீதிமன்ற விசாரணை நடத்தி போர்க்குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை ஒப்புக்கொண்டது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் இதுவரையில் அமுல்படுத்தப்படாமை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் அதிருப்தி வெளியிட்டுள்ளமையையும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச விசாரணைக்கு காலவரையறை நிர்ணயிக்க வேண்டும், இதுகுறித்து சர்வதேச விசாரணை முறையை உருவாக்குவது உள்ளிட்ட மாற்று வழிகளை உலக நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளதை ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணையை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, மெசடோனியா, மான்டநேக்ரோ ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து புதிய பிரேரணை ஒன்றை சமர்பிக்கவுள்ளன.
இந்த முயற்சிகளுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் துணை நிற்க வேண்டும் என ராமதாஸ் தனது அறிக்கையூடாக வலியுறுத்தியுள்ளார்.