அரசாங்கம் தொடர்பில் சுசில் பிரேமஜயந்த விமர்சனம்

by Staff Writer 09-03-2019 | 8:05 PM
Colombo (News 1st) வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த அரசாங்கம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தார். 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தை ஒப்படைத்த சந்தர்ப்பத்தில் வெடிகுண்டொன்றை வழங்கியதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த போது கூறியதை சுட்டிக்காட்டிய சுசில் பிரேமஜயந்த, 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அரசாங்கம் மாறிய சந்தர்ப்பத்தில் முதலாவது வெடிகுண்டு வெடித்ததாகவும் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி மத்திய வங்கியின் வெடிகுண்டு வெடித்ததாகவும் குறிப்பிட்டார். இவ்வாறு வெடித்த வெடிகுண்டுகளின் பெறுபேறே கடந்த 4 வருடங்களில் வௌிவந்துள்ளதாகவும் 20 அல்லது 30 வருடங்கள் வரை இந்நிலை நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ட்ரில்லியன் கணக்கில் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட பாதிப்பு, 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி வெடித்த வெடிகுண்டின் பெறுபேறு எனவும் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார். அந்த வெடிகுண்டை வெடிக்க வைப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து அர்ஜூன மகேந்திரனை அழைத்து வந்தது, பாதுகாத்து, ஆசோசனை வழங்கியது யார் எனவும் சுசில் பிரேமஜயந்த கேள்வி எழுப்பினார். வங்கிகளின் வட்டி வீத அதிகரிப்பு, அரசாங்க வேலைவாய்ப்பு, கம்பெரலிய திட்டம், மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் போன்றவை தொடர்பிலும் அவர் தனது அதிருப்தியை வௌியிட்டார்.