விவசாயிகளுக்கு நெல்லுக்கு கிடைக்கும் விலை நியாயமானதல்ல: பி.ஹரிசன்

by Bella Dalima 08-03-2019 | 8:59 PM
Colombo (News 1st) பெரும்போக நெல் அறுவடையை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நெல்லினை தனியார் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதால், அரசாங்கம் நெல்லிற்கான நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்கத்தினால் விவசாயி ஒருவரிடமிருந்து சுமார் 2000 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. ஒரு கிலோ சம்பா நெல் 41 ரூபாவிற்கும், ஒரு கிலோ சிவப்பு நாடு 38 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் புத்தூரிலுள்ள நெல் கொள்வனவு நிலையத்திலேயே அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் என அதிகளவு தூரத்திலிருந்து நெல்லினை விற்பனை செய்வதற்கு வரவேண்டியுள்ளதுடன், விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, நெல்லிற்கான சந்தைவாய்ப்பு குறைவாகவுள்ளதாக மன்னார் மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர். மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் அரச நெற்களஞ்சியசாலைகள் மூடப்பட்டுள்ளமையால், நெல்லை தனியாருக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. திருகோணமலை - தோப்பூர் பகுதியிலும் நெற்களஞ்சியசாலை இன்மையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு நெல்லுக்கு தற்போது கிடைக்கும் விலை நியாயமானதில்லை என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாக கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் P.ஹரிசன் தெரிவித்தார். விலையை அதிகரிக்க வழிமுறை ஒன்றை தயாரிக்க வேண்டும் என குறிப்பிட்ட அமைச்சர், சிறுபோகத்தில் கட்டாயமாக நெல்லின் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.