பெண் சிகரத்தை எட்ட முடியுமென நிரூபித்திருக்கிறோம்

பெண்ணால் சிகரத்தையே எட்ட முடியுமென்பதை நாம் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்: ஜனாதிபதி

by Staff Writer 08-03-2019 | 3:39 PM
Colombo (News 1st) சர்வதேச மகளிர் தினம் இன்றாகும். சிறந்த வாழ்விற்கான சமச்சீர் நிலை என்பதே சர்வதேச பெண்கள் தினத்திற்கான 2019 ஆம் ஆண்டின் கருப்பொருளாக அமைந்துள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அநுராதபுரம் - சல்காது விளையாட்டரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதேவேளை, மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வௌியிட்டுள்ளனர். ஆசிய நாடுகள் பலவும் வாக்குரிமையை பெற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே இலங்கை பெண்ணுரிமைக்கு முதன்மை இடம் கொடுத்ததாகவும் உலக அரசியலில் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடென்பதுடன், பெண்ணால் சிகரத்தையே எட்ட முடியுமென்பதை நாம் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமூகத்தில் பெண்ணுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிராக எழும் சகல வன்முறைகளையும் வேறுபாட்டை வெளிப்படுத்தும் பராமரிப்புகளையும் அடியோடு அகற்றுவதற்கும், சமமானவர்கள் என்ற வகையில் வருமானங்களை ஈட்டுவதற்கும் அது பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கும் அரச சேவையில் உச்சியை அடைந்தது போல் அரசியல் தீர்மானங்களை இயற்றும் இடங்களிலும் முதலிடம் வகிப்பதற்கும் அத்தீர்மானங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் இலங்கை பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். அத்தகையதோர் உயரிய நிலைமைக்கு இலங்கை பெண்களை கொண்டு செல்லும் இலக்குடன் இலங்கையில் கொண்டாடப்படும் மகளிர் தின கொண்டாட்டத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளின் போது பெண்கள் அச்சமின்றி துணிச்சலுடன் செயற்பட்டதன் மூலம் நாட்டை பலமடையச் செய்ததாகவும் அது பாரிய அர்ப்பணிப்பெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச மகளிர் தின செய்தியில் தெரிவித்துள்ளார். ஆண் மற்றும் பெண்ணின் சமமான சமூகப் பயன்பாட்டினை வலுவூட்டுவதற்கு மிகவும் பொருத்தமான சிறப்பான சந்தர்ப்பமொன்று இன்று உலகில் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மிகவும் சிறந்த சமூகமொன்றுக்குப் பெண்கள் வழங்கும் வினைத்திறன் மிக்க பங்களிப்பினைப் பாராட்டி, ஊக்குவித்து அவர்களின் முன்னோக்கிய பயணத்திற்கு உந்துசக்தியாகவும் உதவியாகவும் இருப்பதற்கு உறுதி பூணுவோம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.