நீதியை நிலைநாட்டும் இயலுமை இலங்கைக்கு உள்ளதா: ஐ.நா மீளாய்வு அறிக்கையில் கேள்வி

by Staff Writer 08-03-2019 | 8:21 PM
Colombo (News 1st) இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்யும் அறிக்கை இன்று வௌியாகியுள்ளது. நல்லிணக்க செயற்பாட்டிற்கான இணைப்பு செயலகம் ஸ்தாபிக்கப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், தேசிய நல்லிணக்க செயலகம் ஆகிய நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பில் இன்று வௌியாகியுள்ள அறிக்கையில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பொறுப்புக்கூறல் தொடர்பான செயற்பாடுகள் மந்தகதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறைந்தளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நீதிமன்றமொன்றை ஸ்தாபிப்பதாக முதலாவது தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயமாக இருந்தாலும், அதற்கான நடவடிக்கை இதுவரையில் எடுக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை உதாரணமாக சுட்டிக்காட்டி இலங்கையில் இடம்பெற்ற பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் நீதியை நிலைநிறுத்துவதற்கான இயலுமை இலங்கையின் உள்ளகக் கட்டமைப்பிற்கு உள்ளதா எனவும் இந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2008, 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவம் இதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர, வெலிக்கடை சிறைச்சாலை மோதலில் 27 பேர் உயிரிழந்தமை, ரத்துபஸ்வல ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மரணம், நடராஜா ரவிராஜ் கொலை, பிரகீத் எக்நெலிகொட காணாமலாக்கப்பட்டமை, லசந்த விக்ரமதுங்க படுகொலை ஆகிய சம்பவங்களும் இந்த அறிக்கையில் நினைவுகூரப்பட்டுள்ளன. பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை குறைந்தளவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளதால், தொடர்ந்தும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet எதிர்வரும் 20 ஆம் திகதி இந்த அறிக்கையை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.