நாலக்க டி சில்வாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

நாலக்க டி சில்வாவின் பிணை கோரிக்கை மேல் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

by Staff Writer 08-03-2019 | 6:07 PM
Colombo (News 1st) பிரமுகர் கொலை சதித்திட்டம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருமான நாலக்க டி சில்வாவின் பிணை கோரிக்கையை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி நிராகரித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவைத் திருத்தி பிணையில் விடுவிப்பதற்கு கோட்டை நீதவானுக்கு உத்தரவிடுமாறு கோரி முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பம் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. பிணை விண்ணப்பத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்காமலேயே நீதவான் அதனை நிராகரித்தார். பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கமைய, பிணை விண்ணப்பத்தை நிராகரித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்பூர்வமானது என நீதிபதி தெரிவித்தார்.