மாறுபட்ட கருத்தைக் கூறிய சுமந்திரன்

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மாறுபட்ட கருத்தைக் கூறிய சுமந்திரன்

by Staff Writer 07-03-2019 | 7:23 PM
Colombo (News 1st) வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உத்தேச வரவு செலவுத் திட்டம் தொடர்பில் லங்கா தீப பத்திரிகைக்கு செவ்வியொன்றை வழங்கியிருந்தார். இல்லாத வருமானத்தையும் உண்மையான செலவீனத்தை விட குறைந்த செலவையும் சோடித்துக் காட்டும் தரவுகள் காரணமாக, வரவு செலவுத் திட்டம் மாற்றமடைந்துள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார். உண்மையான தரவுகள் நாட்டிற்கோ, மக்களுக்கோ பகிரங்கப்படுத்தப்படுவது இல்லை எனவும் இது நீண்ட காலமாக வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறுவதாகவும் அவர் கூறியிருந்தார். போலியான தரவுகள் மற்றும் உண்மையான தரவுகளுக்கு இடையிலான இடைவௌிக்கு அமைய, இலங்கையின் பொருளாதார நெருக்கடி மக்கள் நினைப்பதை விடவும் மோசமானது என தாம் கருதுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், அன்று வௌிப்படுத்திய கடும் அதிருப்திக்கு பதிலாக மாறுப்பட்ட கருத்தை முன்வைத்தார். நாடு எதிர்நோக்கும் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கை பொறுப்புணர்ச்சியுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென நினைப்பதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கு அபிவிருத்திக்காக நிதியமொன்று ஸ்தாபிக்கப்பட்டமைக்கு நன்றி கூறுவதாகவும் தற்போது அவர்கள் ஒத்துழைப்புடன் செயற்படுவது தெரிவதாகவும் குறிப்பிட்டார். வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றமை மற்றும் நடைமுறைப்படுத்தப்படுகின்றமைக்கு இடையே வேறுபாடு உள்ளதாகவும் இந்த திட்டங்களில் 20 வீதமேனும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற அச்சமே தமக்குள்ளதாகவும் தெரிவித்தார்.