தமிழ் உறவுகள் கஷ்டப்பட்டால் குரல் கொடுப்பேன்

தமிழ் உறவுகள் கஷ்டங்களை எதிர்நோக்கினால் அவர்களுக்காக குரல் கொடுப்பேன்: நரேந்திர மோடி

by Bella Dalima 07-03-2019 | 5:40 PM
இந்தியாவிலோ உலகின் எந்தப் பகுதியிலோ தமிழ் உறவுகள் கஷ்டங்களை எதிர்நோக்கினால், அவர்களுக்காக குரல்கொடுக்கத் தயாராக உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர் பிறந்த மண்ணில் உள்ள இந்தியத் தமிழர்களுக்கு 14,000 வீடுகளை இந்தியா அமைத்துக் கொடுப்பதையிட்டு அனைவரும் பெருமையடைய வேண்டும் என இந்தியப் பிரதமர் தெரிவித்தார். கடந்த வருடத்தில் முதற்கட்டமாக 1000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் 3000 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திர சுட்டிக்காட்டினார். இலங்கை அரசாங்கம் வீடுகளை அமைப்பதற்குரிய காணிகளை அடையாளப்படுத்தியவுடன் ஏனைய வீடுகளை அமைக்கும் பணிகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பிரதமர் தாம் தான் எனவும் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியதாகவும் நரேந்திர மோடி குறிப்பிட்டார். சென்னையில் நேற்று (06) இடம்பெற்ற அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சிகளின் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றிருந்த போது இந்திய பிரதமர் மோடி இவ்விடயங்களைத் தெரிவித்தார். இந்த பரப்புரைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாட்டாலி மக்கள் கட்சியின் நிறுவனர் டொக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் , புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி, பா.ஜ.க-வின் தமிழக மாநிலத் தலைவி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.