by Staff Writer 07-03-2019 | 10:21 PM
Colombo (News 1st) விபத்தில் சேதமடைந்ததாகக் கருதப்படுகின்ற அரசாங்கத்திற்கு சொந்தமான ஜீப் ஒன்று இன்று கந்தளாய் அக்போபுர பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் - அக்போபுர பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
வாகன விபத்தில் சேதமடைந்த வாகனமொன்று குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பிரதேச மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
ஜீப் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட பிட்டதூவ சஞ்ஜீவ என்பவரின் வீட்டில் இருந்து இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கந்தளாய் - சீனிபுர பகுதியில் இந்த வாகனம் மாடு மீது மோதியதாக அவர் கடந்த 26 ஆம் திகதி பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் இந்த வாகனம் தமக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விபத்து 20 ஆம் திகதி இடம்பெற்றாலும் அண்மைய நாளொன்றில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்ததால் முறைப்பாடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
KC-0443 என்ற இலக்கம் கொண்ட இந்த வாகனம் மோட்டார் வாகன திணைக்கள தரவுகளுக்கு அமைய வௌிவிகார அமைச்சுக்கு சொந்தமானவொன்றாகும்.
2006 இல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை வௌிவிவகார அமைச்சின் அனுமதியின்றி விற்கவோ மாற்றவோ அழிக்கவோ முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜீப் வாகனம் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்திடம் வினவியபோது, இந்த வாகனத்தை மோட்டார் வாகன ஆய்வாளரிடம் சமர்ப்பித்து உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.