அலி ரொஷான் உள்ளிட்ட 7 பிரதிவாதிகளும் விடுதலை

அலி ரொஷான் உள்ளிட்ட 7 பிரதிவாதிகளும் விடுதலை

by Staff Writer 07-03-2019 | 12:02 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக 4 யானைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில், அலி ரொஷான் என அழைக்கப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது. பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நிராகரித்த நீதிமன்றம், அவர்களை விடுவித்துள்ளது. குற்றப்பத்திரிகையை விசாரணை செய்வதற்கு விசேட மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன் மற்றும் சம்பா ஜானகி ராஜரட்ன ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சந்தேகநபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் தடையை நீக்குவதற்கும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் 7 பேருக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உள்ளிட்ட 4 நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு, தமது நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகாது எனவும் விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது. இதன்படி, விசேட மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் இன்று நிறைவடைந்தன. எவ்வாறாயினும், பிரதிவாதிகள் 7 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசதரப்பு சட்டத்தரணி ஜனக்க பண்டார மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். அனுமதிா்பத்திரமின்றி 4 யானைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அலி ரொஷான் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் 24 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, கடந்த வருடம் ஒக்டோபர் 11 ஆம் திகதி விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.