வர்த்தகர்கள் கொலை: கைதான பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

by Staff Writer 06-03-2019 | 7:09 AM
Colombo (News 1st) ரத்கமவில் வர்த்தகர்கள் இருவரைக் கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மேலும் 3 பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று காலி நீதவான் நீதிமன்ற பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, தென் மாகாணத்திற்கான விசேட விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் இலேபெரும ஆரச்சிகே சமன் ரோகன, உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் திலகரத்ன மற்றும் கான்ஸ்டபிள் உபுல் ரஞ்சித் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், ரத்கம பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட தென் மாகாணத்திற்கான விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கபில நிஷாந்த சில்வா மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் விராஜ் மதுஷங்க, கான்ஸ்டபிள் சங்ஜய சானக மற்றும் வலஸ்முல்ல பகுதிக்கு பொறுப்பாக இருந்த வன இலாகா அதிகாரி துஷார நளிந்த ஆகிய நால்வரும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த சம்பத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி மஞ்சுள அசேல மற்றும் ரஷீன் ச்சிந்தக்க ஆகிய வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டமை தொடர்பில் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணிமனையின் விசேட விசாரணைப் பிரிவின் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.