வடக்கின் பெருஞ்சமர் நாளை ஆரம்பம்

வடக்கின் பெருஞ்சமர் நாளை ஆரம்பம்

by Staff Writer 06-03-2019 | 5:40 PM
Colombo (News 1st) யாழ். மத்திய கல்லூரிக்கும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 113 ஆவது வடக்கின் பெருஞ்சமர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது. பாடசாலை மட்டத்தில் பழமைவாய்ந்த கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் வடக்கின் பெருஞ்சமர் 1904 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இதுவரை இடம்பெற்றுள்ள 112 சமர்களில் 36 போட்டிகளில் சென்.ஜோன்ஸ் அணியும் 28 போட்டிகளில் மத்திய கல்லூரி அணியும் வெற்றி பெற்றுள்ளன. 40 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளன. 1967 ஆம் ஆண்டில் ஒரு போட்டி கைவிடப்பட்டதாகவும் 1905, 1911-1914, 1925, 1927 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை எனவும் தரவுகள் கூறுகின்றன. இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று 7 வருடங்களின் பின்னர் கிண்ணத்தை சுவீகரித்தது. சென். ஜோன்ஸ் அணி 2017ஆம் ஆண்டில் வெற்றி பெற்றதும் நினைவுகூரத்தக்கது. 19 வயதிற்குட்பட்ட இலங்கை குழாத்தை பிரதிநிதித்துவப்படுத்திய செல்வராசா மதுசன் இந்தமுறை யாழ். மத்திய கல்லூரி அணியை வழிநடத்துகின்றார். தேசிய குழாத்தில் இடம்பெற்ற மற்றுமொரு வீரரான வியாஸ்காந்த் யாழ். மத்திய கல்லூரி அணியில் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும். யாழ். மத்திய கல்லூரி அணியின் பயிற்றுநரான சுரேஷ்மோகன் 15 வருட அனுபவம் கொண்டவராவார். இதேவேளை, கடந்த வருடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் எதிர்பார்ப்பில் சென். ஜோன்ஸ் அணி காத்திருக்கிறது. சென். ஜோன்ஸ் அணியில் நான்காவது ஆண்டாக இடம்பெறும் சகலதுறை வீரரான மேர்பின் அபினாஷ் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார். சென். ஜோன்ஸ் அணியின் முன்னாள் தலைவர் பத்மநாதன் லவேந்திரா இரண்டு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் பயிற்றுநராக பொறுப்பேற்றுள்ளார். நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வடக்கின் பெருஞ்சமர் இந்த முறையும் விறுவிறுப்பிற்கு பஞ்சமின்றி மூன்று நாட்களுக்கு நீடித்து ரசிகர்களுக்கு பெருவிருந்து படைக்கும் என்பதில் ஐயமில்லை.