கால அவகாசத்தை கோரத் தயாராகும் இலங்கை அரசாங்கம்

மனித உரிமை பேரவையில் மேலும் 2 வருட கால அவகாசத்தை கோரத் தயாராகும் இலங்கை அரசாங்கம்

by Staff Writer 06-03-2019 | 7:25 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் கால எல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகம், வௌிவிவகார அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்களம் ஆகியன இது தொடர்பில் விடயங்களை தௌிவூட்டி இன்று அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது அமர்வு ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகின்றது. 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட அறிக்கை செயற்படுத்தப்பட்டதன் முன்னேற்றம் தொடர்பில் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் எதிர்வரும் 20 ஆம் திகதி முழுமையான அறிக்கையொன்றை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். அரசாங்கம் இன்று வெளியிட்ட ஒன்றிணைந்த அறிக்கையின் பிரகாரம், பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகளுடன் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரேரணையொன்றை நிறைவேற்றுவதன் ஊடாக மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை கோருவதற்கு தயாராகுகின்றமை புலப்படுகின்றது.