நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஒத்துழைப்பு

நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: நோர்வே இராஜாங்க செயலாளர்

by Staff Writer 06-03-2019 | 7:16 PM
Colombo (News 1st) இலங்கையில் இடம்பெறும் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக நோர்வே இராஜாங்க செயலாளர் மரியான் ஹேகன் (Marianne Hagen) தெரிவித்துள்ளார். முகமாலையில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை பார்வையிட்ட பின்னரே அவர் இதனைக் கூறியுள்ளார். நோர்வே இராஜாங்க செயலாளர் மரியான் ஹேகன் உள்ளிட்ட குழுவினர் இன்று முகமாலைக்கு சென்றிருந்தனர். இலங்கையின் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக மூன்று வருட திட்டத்தை முன்னெடுக்க நோர்வே அரசாங்கம் 60 மில்லியன் நோர்வே க்ரோன் வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. நோர்வே அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நோர்வே நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சுமார் 50 வீத நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் நோர்வேக்கு இடையில் 70 வருட உறவு இருக்கின்றது. எதிர்காலத்திலும் இந்த உறவு நீடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பொதுவான சவால்களான காலநிலை மாற்றம் போன்றவற்றிலும் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக மரியான் ஹேகன் குறிப்பிட்டுள்ளார்.